தமிழகத்தில் 4.30 சதவீதம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டயாலிசிஸ் மையங்களின் எண்ணிக்கையை 500-ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தேசிய அளவில், சிறுநீரக நோய் மற்றும் செயலிழப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தெலங்கானா, கோவா, ஒடிசா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக 5-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டோரின் தேசிய சராசரி 3.20 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 4.30 சதவீதத்தினர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், நீரிழிவு நோயாளிகளில் 40 சதவீதத்தினர் சிறுநீரக செயலிழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, இரு நாள்களுக்கு ஒரு முறை முதல், வாரத்திற்கு மூன்று முறை வரை டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அதற்குத் தேவையான அளவில் டயாலிசிஸ் சேவை மையங்கள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படவில்லை.
மாநில அளவில் உள்ள 146 அரசு மருத்துவமனைகளில், 1,395 டயாலிசிஸ் இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் வாயிலாக 2025-26-ம் ஆண்டில் 9,471 பேர் மட்டும் தான் பயனடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இந்த அளவுக்கு மட்டுமே டயாலிசிஸ் செய்யப்படுவது போதுமானதல்ல. தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்து கொள்ள ஓர் அமர்வுக்கு ரூ.2000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.3 முதல் 4 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த செலவினை செய்ய முடியாமல், தொடர் சிகிச்சை அளிக்காமல் பலர் கைவிடும் நிலையும் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்கவும், சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளைக் காக்கவும், டயாலிசிஸ் சேவை மையங்கள் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தவிர தேவையான இடங்களில் மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், குறைந்தது ஒரு டயாலிசிஸ் எந்திரமாவது அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.